மும்பை:
கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் போது அனைத்து மாநிலங்களிலும் உறியடி திருவிழா நடைபெறும். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் உறியடி விழா மிகவும் பிலபலம். உயரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள பானையை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி பிரமிடு அமைத்து உடைப்பர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற உறியடி திருவிழாவில் பங்கு பெற்ற 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் பரிதாபமாக பலியாகினார். மற்றொரு நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோல் உறியடி விழா முடிந்த பின் வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட மாரடைப்பால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மாநிலத்தின் பல பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற 117 பேர் படுகாயமடைந்தனர்.