கடைகள் தீப்பிடித்து எரிந்த காட்சி. 
செய்திகள்

வளநாடு அருகே சிலிண்டர் வெடித்து 2 கடைகள் தீயில் எரிந்து நாசம் - 5 பேர் காயம்

வளநாடு அருகே நள்ளிரவில் சிலிண்டர் வெடித்ததில் 2 கடைகள் தீயில் எரிந்து நாசமாயின. இதில், 5 பேர் காயமடைந்தனர்.

மாலை மலர்

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வளநாடு அருகே உள்ள ஊத்துக்குழியை சேர்ந்தவர் நாகராஜ். இவர், இப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே மாற்றுத் திறனாளியான கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை அடைத்துவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.

அப்போது நள்ளிரவு டீக்கடையில் இருந்து புகை வந்தது. இதனை அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் பார்த்து கடைக்காரர்களுக்கும், இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் டீக்கடை முழுவதும் தீப்பற்றி எரிந்ததுடன் அருகில் உள்ள ஓட்டலுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே, அருகில் இருந்தவர்களும் எழுந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது டீக்கடையில் இருந்த ஒரு சிலிண்டர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சிலிண்டர் வெடித்ததில் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்கள் பறந்தன.

பின்னர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இருப்பினும் 2 கடைகள் மற்றும் அந்த கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன.

இந்த தீ விபத்தில் தனலட்சுமி, நாகராஜ் மற்றும் சுப்ரமணியன், நாராயணன், பூவாயி ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.