கோப்புப்படம் 
செய்திகள்

சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி பலி - 3 பேர் காயம்

கோவில் தேர்த்திருவிழாவின் போது பலூன் கடையில் நைட்ரஜன் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் பலூன் வியாபாரி பரிதாபமாக இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

மாலை மலர்

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த மலைக்கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று மாலை 3 மணிக்கு விநாயகர், குழந்தை வேலாயுதசாமி வள்ளி-தெய்வானையுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

இந்த நிலையில் மாலை5 மணிக்கு தேர் கிரிவலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. குழந்தை வேலாயுதசாமி கோவிலின் பின்புறத்தில் பலர் கடைகள் அமைத்து இருந்தனர். அங்கு சிறுவர்களுக்கான பலூன் விற்பனை செய்யும் கடையில் நைட்ரஜன் காற்று நிரப்பிய பலூன்களை திருப்பூர்-அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 37) என்பவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

நைட்ரஜன் கியாஸ் சிலிண்டர் மூலம் காற்று நிரப்பிய பலூன்களை விற்பனை செய்து வந்தார். அப்போது மாலை 6 மணியளவில் அவர் பயன்படுத்திய நைட்ரஜன் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பலூன் வியாபாரி நாகராஜனின் இடது கால் துண்டானது.

வெடித்து சிதறிய நைட்ரஜன் சிலிண்டரின் பாகங்கள் மங்கலம் அருகே இருந்த பல்லவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரகாஷ் (30) மற்றும் சோமனூர் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகள்களான சம்ரிதா (11), ஹர்சிதா (8), ஆகியோரின் மீதும் விழுந்தது. இதில் ஹரிபிரகாஷ், சம்ரிதா, ஹர்சிதா ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் வெடித்து சிதறிய நைட்ரஜன் சிலிண்டரின் பாகங்கள் அருகே இருந்த இருசக்கர வாகனம், கார் மீதும் விழுந்தது.

கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சாமளாபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பலூன் கடைக்காரர் நாகராஜ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நாகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம்அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.