செய்திகள்

பானி புயல் நாளை தாக்குகிறது - ஒடிசாவில் தயார் நிலையில் மீட்பு குழு

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள பானி புயல் நாளை ஒடிசா மாநிலத்தை தாக்க உள்ளதால், அங்கு மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். #CycloneFani

மாலை மலர்

புவனேஸ்வர்:

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான பானி புயல் முதலில் தமிழ்நாட்டை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் திசை மாறியதால் ஆந்திராவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நினைத்தனர்.

ஆனால் பானி புயல் மீண்டும் திசைமாறி ஒடிசா மாநிலத்தை குறி வைத்துள்ளது. ஒடிசா மாநிலம் புரி அருகே நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் பானி புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பானி புயல் கரையை கடக்கும்போது சுமார் 210 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பலத்த, மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 20 செ.மீ. அளவுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடலோர பகுதி முழுவதும் நேற்று முதலே கடல் கொந்தளிப்பாக உள்ளது.

இதனால் பிரதீப் துறைமுகத்தின் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை சீர்குலைத்த கஜா புயலை விட 2 மடங்கு வலுவாக பானி புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கணித்து இருப்பதால் ஒடிசாவை இந்த புயல் கடுமையாக பாதிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.

இதையடுத்து ஒடிசாவில் 19 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புரி, நயாகர், கட்டாக், கஜபதி, மயூர்கஞ்ச், ஜகத்சிங்பூர், கேந்திரபரா, பலாசோர், பத்ரக், கஞ்சம், குர்தா, ஜஜ்பூர், டென்கனல், கியாஞ்கர் ஆகிய 14 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அடிப்படையில் முன் எச்சரிக்கை பணிகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை அரசு அலுவலகங்களும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு நிவாரணப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதால் ஒடிசாவின் 11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

தாழ்வான பகுதிகள், கடலோர பகுதிகள் மற்றும் அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் இருந்து சுமார் 8 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புரியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் 3 ரெயில்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

ஆந்திராவிலும் பானி புயலை எதிர்பார்த்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகா குளம் மாவட்டங்களில் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பானி புயல் தாக்கம் இன்றே தொடங்கி இருப்பதால் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது.

இன்று காலை பானி புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு, தென்மேற்கு திசையில் மையம் கொண்டிருந்தது. தற்போது அது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது.

நாளை பிற்பகல் புரி நகரின் தென் பகுதியில் கோபால்பூர்-சந்த்பாலி கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் நகர்வை சென்னை, விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம் வானிலை ஆய்வு மையங்கள் கண்காணித்தப்படி உள்ளன.

பானி புயல் அச்சுறுத்தலை தொடர்ந்து தென்னக ரெயில்வே நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயண திட்டத்தில் மாற்றங்களை செய்துள்ளது. இன்றும், நாளையும் ஒடிசா வழியாக செல்லும் 23 நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து அவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12841) இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல அவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவுரா மெயில், ஹால்டியா எக்ஸ்பிரஸ், சாலிமர் எக்ஸ்பிரஸ், சந்திரகாசி எக்ஸ்பிரஸ், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்கிழக்கு ரெயில்வே 43 ரெயில்களை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகள் இன்றும், நாளையும் பயணத்தை தவிர்க்குமாறு தென்கிழக்கு ரெயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்கு கடலோர ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 103 ரெயில்களை ரத்து செய்துள்ளது.

புயல் ஆபத்தை கருத்தில் கொண்டு இண்டிகோ விமான நிறுவனம் 11 விமான சேவைகளை நிறுத்தி உள்ளது. இதற்கிடையே கடலோர பகுதி விமான சேவையில் கவனமாக இருக்கும்படி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க அரசுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் விமான நிலையங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒ.என்.ஜி.சி. ஊழியர்கள் 500 பேர் பாதுகாப்பு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒடிசா மாநில அரசு நிவாரண முகாம்களை தீவிரமாக அமைத்து வருகிறது. 900 புயல் பாதிப்பு மையங்கள் அம்மாநிலத்தில் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தால் உணவு பொட்டலம் போடுவதற்காக 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

1 லட்சம் உயர் வகை உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளன. உணவு தயாரிப்பு கூடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக இந்திய கடலோர காவல் படையினர் 78 படை பிரிவுகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஆந்திரா, ஒடிசா தவிர மேற்கு வங்காளத்தில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் 32 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் முகாமிட்டு உள்ளன. இந்த மாநிலங்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ரு.1,086 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை பானி புயல் ஒடிசா கடலோர பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலின் மேற்கு மத்திய பகுதியில் இருந்தது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் அது நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

இதனால் கடலோர பகுதி மக்கள் சற்று பீதி அடைந்துள்ளனர். இதற்கிடையே ஆந்திராவிலும் புயல் பாதிப்பு பணிகள் மேற்கொள்ள தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். #CycloneFani