செய்திகள்

கம்பம் பகுதியில் வீட்டில் பதுக்கிய ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது

கம்பம் பகுதியில் நடந்த அதிரடி சோதனையில் வீட்டில் பதுக்கிய ரூ.2½ லட்சம் கள்ளநோட்டுகள் பிடிபட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #fakenote #cumbam #arrested

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிகளவில் கள்ளநோட்டுகள் புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் கடந்த ஒரு மாதகாலமாக கம்பம் பகுதி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். கே.கே.பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டுகள் பதுக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் எட்டியது. அதனைதொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது பெயர் அஜ்மல்கான். இவரது தந்தை ஜபரூல்லா. இவர் ஏற்கனவே கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் மதுரை சிறையில் உள்ளார்.

தந்தை செய்த தொழிலையே அஜ்மல்கான் கையில் எடுத்துள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் மற்றும் மேற்குவங்காளத்தில் இருந்து கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இவரது வீட்டில் இருந்து ரூ.2½ மதிப்பிலான ரூ.500, ரூ.2000 கள்ளநோட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

பிடிபட்ட அஜ்மல்கானிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் போடியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை போலீசார் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். பிடிபட்ட 3 பேரின் பெயர்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

எனினும் இந்த கும்பலுக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது, கள்ளநோட்டு அச்சடிப்பதற்கு மூளையாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

SCROLL FOR NEXT