சென்னை:
’தமிழர் தந்தை‘ சி.பா ஆதித்தனாரின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், மா.பா பாண்டிய ராஜன் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மா.பா.பாண்டியராஜன் கூறியதாவது:-
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் சில அறிவிப்புகளை இங்கே வெளியிடுகிறேன். உலகமெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றினைக்கும் விதமாக தமிழ் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட உள்ளது.
தமிழர்களின் பண்பாட்டு இசைக்கலை, கர்நாடக இசை ஆகியவை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக இந்த மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை பரப்பும் விதமாக தமிழ் வளர்ச்சி மையம் உருவாக்கப்பட உள்ளோம். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கீழ் இம்மையம் செயல்படும்.
கீழடியில் மூன்று கட்ட ஆய்வுகள் முடிந்துள்ளது, அடுத்த கட்ட ஆய்வு பெரிய அளவில் இருக்கும். மத்திய அரசின் கீழ் இயங்கும் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு தேவையான நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பாண்டியராஜன் கூறினார்.