திருப்பூர்:
கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கினர். தற்போது பழையகோட்டை கிராம பகுதிகளில் ஒரு ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரையில் மொத்தம் 100 ஏக்கர் பரப்பளவிற்குள் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் மஞ்சள் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு மண் செப்பனிடுதல், குப்பை இடுதல், நல்ல தரமான விதை மஞ்சள், உழவு கூலி, பயிர் பாதுகாப்பு மேலாண்மை, உரப் பாதுகாப்பு மேலாண்மை, களைக்கொள்ளி எடுத்தல் என ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளனர்.
இந்தநிலையில் இப்பகுதி விவசாயிகள் மஞ்சளின் ஊடுபயிராக சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் மஞ்சள் சாகுபடிக்கு செலவிடப்படும் உழவு பணிகள், விதைப்பு பணிகள், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பயிர்பாதுகாப்பு அனைத்தும் சின்னவெங்காயம் சாகுபடிக்கும் பயன்படும் நிலையில் உள்ளது.