செய்திகள்

குஜராத்தில் ஆற்றில் துணி துவைக்க சென்ற பெண்ணை கடித்துக் கொன்ற முதலை

குஜராத்தில் ஆற்றில் துணி துவைக்க சென்ற பெண்ணை ராட்சத முதலை கடித்துக் கொன்ற சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

மாலை மலர்

குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் உள்ள ஜகாதிடியா தெஹ்சில் பகுதியில் உள்ள கிராமம் பலோத். இந்த கிராமம் வழியாக நர்மதா ஆறு பாய்ந்தோடுகிறது.

இன்று காலை தக்‌ஷாபென் தெவார் என்ற பெண் துணி துவைப்பதற்காக ஆற்றங்கரையோரம் சென்றார். அவருடன் மற்றொரு பெண்மணியும் சென்றிருந்தார். துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது தக்‌ஷாபென் தெவார் திடீரென தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த பெண், உற்றுக்கவனிக்கும்போது முதலை தக்‌ஷாபென் தெவாரை கவ்விப் பிடித்திருந்தது தெரியவந்தது.

இதனால் கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களை அழைத்தார். பெண் அலறும் சத்தம் கேட்டு அருகில் படகு ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீருக்குள் குதித்து பெண்ணை தேடினார்கள். அப்போது தக்‌ஷாபென் தெவார் முதலை தாடைக்குள் அகப்பட்டிருந்தார். படகோட்டிகள் கம்பு, தடி போன்ற ஆயுதங்களால் முதலையை தாக்கினார்கள். உடனே அந்த முதலை தக்‌ஷாபென் தெவாரை விட்டுவிட்டு ஓடியது. ஆனால், முதலை கடித்து குதறியதில் தக்‌ஷாபென் தெவார் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆற்றிற்கு துணி துவைக்க சென்ற பெண்ணை முதலை கடித்துக் கொன்ற சம்பவம் அக்கிராமத்தில் பீதியை கிளப்பியுள்ளது.