நடிகர் கமலஹாசன் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பற்றி விமர்சனம் செய்திருந்தார்.
தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரை விட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.
கமலஹாசனின் இந்த கருத்துக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர்கள் டி.ஜெயகுமார், எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், சி.வி.சண்முகம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோர் கமலஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
கமலஹாசனை அமைச்சர்கள் விமர்சனம் செய்வதற்கும், மிரட்டுவதற்கும் தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசையும் அரசை சார்ந்தவர்களையும் விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. உரிமையும் உண்டு. அந்த வகையில்தான் நடிகர் கமலஹாசன் தமிழக அரசை விமர்சித்துள்ளார். இதில் என்ன தவறு?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு இன்று கலை உலகில் தலை சிறந்த நடிகராக திகழ்பவர் கமலஹாசன். உலகின் தலை சிறந்த நடிகர் அவர். இன்று அவரை அமைச்சர்கள் வார்த்தைகளால் தாக்கி எச்சரிக்கை விடுப்பது, மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது. இது அரசுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே இந்த போக்கை தமிழக அரசும் அமைச்சர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பழனியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் கமலஹாசன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் தமிழக அரசின் ஆட்சியை விமர்சனம் செய்யலாம். இதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், அது ஒரு வரைமுறைக்குள், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். அதற்காக நடிகர் கமலஹாசன் பற்றி தமிழக அமைச்சர்கள் பேசி இருப்பது தவறே.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொரு வருக்கும் அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்ய உரிமை உண்டு. கமலஹாசன் டி.வி. நிகழ்ச்சி நடத்துவது பற்றி நானே விமர்சனம் செய்து இருக்கிறேன். அவர் அரசு நிர்வாகத்தில் நடக்கும் தவகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஊழல் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதைத் தான் அவர் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள மணலை கொள்ளையடித்து கர்நாடகத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அதை வைத்து காவிரியின் குறுக்கே அணை கட்டுகிறார்கள். இது போன்றவற்றை சுட்டிக் காட்டினால் மிரட்டும் தொனியில் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அரசு திரைப்படங்களுக்கு மானியம், சிறந்த படங்களுக்கு விருது வழங்குவதை வரவேற்கிறோம். குறை இருந்தால் சுட்டிக் காட்டுகிறோம். தமிழ் நாட்டின் பல உரிமைகளை மத்திய அரசிடம் இழந்து விட்டோம். தமிழ்நாட்டில் உரிமைக்காக போராடுகிறவர்களை போலீசார் அடக்குகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
கமலஹாசன் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய பொக்கிஷம். ஒரு அரசு நல்லது செய்தால் பாராட்டவும், தவறுகளை சுட்டிக்காட்டவும் அனைவருக்கும் உரிமை உண்டு. இதை நடிகர்கள் மற்றவர்கள் என்று பிரித்து பார்ப்பது தவறு.
கமலஹாசனின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு திரை உலகம் எப்போதும் அவருடன் இணைந்து குரல் கொடுக்கும்.