புதுடெல்லி:
நாடு முழுவதும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 4,896 பேர் உள்ளனர்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாகவும், விரைவு கோர்ட்டு மூலமாக விரைவாக விசாரிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது இருக்கும் வழக்குகள், சிறப்பு கோர்ட்டுகள் குறித்து 2 மாதத்தில் தகவல் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக தகவல்களை சேகரித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் நாடு முழுவதும் 36 சதவீத எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1765 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மொத்தம் 3045 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இதில் உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் வழக்கில் சிக்கி உள்ளனர். 248 பேர் மீது வழக்கு இருக்கிறது. 539 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் 178 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது மொத்தம் 324 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, கேரளா, டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்கை விரைந்து விசாரிக்க 12 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது. மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க மத்திய அரசு ரூ.7.80 கோடி அனுமதித்துள்ளது.
எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்க டெல்லியில் 2 சிறப்பு கோர்ட்டு அமைக்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்படுகிறது.