செய்திகள்

ஜி.எஸ்.டி-க்கு எதிரான பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக விருதுநகர் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கடந்த 6 நாட்களாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

விருதுநகர்:

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி. வரி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலை மிகவும் பாதித்துள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். பட்டாசு தொழிலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க பட்டாசு உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால், ஜி.எஸ்.டி வரியை கண்டித்து கடந்த 30-ந் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இவர்களுக்கு ஆதரவாக பட்டாசு விற்பனையகங்களும் மூடப்பட்டன. 

பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 600-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனையகங்களும் மூடப்பட்டன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

இதே போல் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கின. இன்று 2-வது நாளாக விருதுநகர் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடிக்கிடந்தன. இதனால் சுமார் 3 லட்சம் பேர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்.

பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் இன்றும் 6வது நாளாக நீடித்தது. இதனிடையே, பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு சார்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிரான விருதுநகர் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சிவகாசியில் நடைபெற்ற பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வரி குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய வணிக வரித்துறை செயலர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ்

பெறப்பட்டதாக, சங்கத்தின் தலைவர் ஆசைத்தம்பி தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜியின் வேண்டுகோளை ஏற்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.