செய்திகள்

ஜார்க்கண்ட்: தண்டவாளத்தில் விரிசல் - பெரிய விபத்து தவிர்ப்பு

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கண்டறிந்த ரெயில்வே ஊழியர் துரிதமாக செயல்பட்டு அங்கு வந்த பயணிகள் ரெயிலை தடுத்து நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

மாலை மலர்

ஜாம்ஷெட்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலம் ராஜகர்ஸ்வான் மற்றும் பாராபம்பு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை ரெயில்வே ஊழியர் புவனேஷர் பிரதான் சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தார்.

இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க முடிவு செய்தார். ஆனால், அந்த சமயத்தில் டாடாநகரில் இருந்து இட்வாரி செல்லும் பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டிருப்பதை கண்டார்.

அப்போது அவர் தன்னிடம் இருந்த பட்டாசுகளை வெடித்தும், சிகப்பு கொடியை காட்டியும் பாசஞ்சர் ரெயிலை தடுத்து நிறுத்தினார். சிகப்பு கொடியை பார்த்ததும் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டார்.

இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை சரிசெய்தனர். அதன்பின் அங்கிருந்து பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டறிந்த புவனேஷ்வர் பிரதானுக்கு பாராட்டுகள். நிச்சயம் அவர் கவுரவிக்கப்பட வேண்டியவர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் கண்டறிந்து, பாசஞ்சர் ரெயிலை பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றிய புவனேஷ்வர் பிரதானுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.