செய்திகள்

இரு அணிகளும் இணைவது குறித்து பேச தயாராக இருக்கிறோம்: சி.ஆர்.சரஸ்வதி

இரு அணிகள் இணைவது குறித்த பிரச்சனைகளை பேசி தீர்க்க தயாராக உள்ளோம் என விழுப்புரத்தில் அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் உள்ளது.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, பல சோதனைகள் கடந்து வந்துள்ளது. இன்றைக்கு இந்த கட்சியை அழிக்க பலர் சதி செய்கின்றனர். 2 அணியினரும் இணைவதற்காக வெளிப்படையான தன்மைகளை கொண்டு அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகிறோம். இரு அணிகள் இணைவது குறித்த பிரச்சனைகளை பேசி தீர்க்க தயாராக உள்ளோம்.

விரைவில் இருஅணிகளும் ஒருங்கிணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். கட்சியில் எந்த பிரச்சனை வந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்கள் மற்றும் மக்கள் மனதில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.