செய்திகள்

முழுக்க முழுக்க பெண் ஊழியர்களே பணியாற்றும் மும்பை மாதுங்கா ரெயில் நிலையம்

மும்பை மாதுங்கா ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருமே பெண்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

மராட்டிய மாநிலத்தில் செயல்பட்டு வரும் மத்திய ரெயில்வேயின் கீழ் மும்பை மாதுங்கா ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 30 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைவரும் பெண் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுங்கா ரெயில் நிலைய மேலாளராக மம்தா குல்கர்னி வேலை செய்து வருகிறார். புக்கிங் கிளார்க்காக 11 பேரும், ஆர்.பி.எப். வீரர்களாக 5 பேரும், டிக்கெட் செக்கிங்கில் 7 பேரும் வேலை செய்து வருகின்றனர்.

விரைவில் இதுபோன்று பெண் ஊழியர்கள் கொண்டு இயங்கும் ரெயில் நிலையங்கள் அதிகரிக்க இது முன்னுதாரணமாக அமையும் என
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ரெயில் நிலைய மேலாளர் மம்தா குல்கர்னி கூறுகையில், “இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். எனது 25 ஆண்டு பணிக்காலத்தில் இதுபோல் பெண் ஊழியர்களுடன் வேலை செய்வேன் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக, ஒற்றுமையுடன் செயல்படுவோம்’’ என்றார்.