திருவனந்தபுரம்:
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சியின் மாநில செயலாளராக கோடியேறி பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார்.
இவரது மகன் பினோய். இவர் துபாய் உள்பட வெளிநாடுகளில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
துபாயை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பினோய் ரூ.13 கோடி கடன் வாங்கியதாகவும், ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி செலுத்தவில்லை என்றும் அந்த நிறுவனம் சார்பில் துபாய் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அவர் மீது கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் பினோய் கேரளாவுக்கு வந்துவிட்டார். ஆனாலும் அவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மகனே மோசடி புகாரில் சிக்கி உள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோடியேறி பாலகிருஷ்ணன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி கோடியேறி பாலகிருஷ்ணன் கூறும் போது என் மகன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு சரியாக எதுவும் தெரியாது. இது தொடர்பாக அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில் இந்த மோசடி புகார் தொடர்பாக பினோய் கூறும்போது இந்த வழக்கு 2014-ம் ஆண்டே சமரசம் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த பிரச்சினையை தற்போது பெரிதாக்குவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார்.
கேரள மாநிலம் சாவரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயன்பிள்ளை. இவரது மகன் ஸ்ரீஜித். இவர் துபாயை சேர்ந்த ராகுல் கிருஷ்ணா என்பவரிடம் இருந்து தனது கம்பெனிக்காக ரூ.11 கோடி பணத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் செக் கொடுத்தபோது அது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது.
இதுதொடர்பாக ஸ்ரீஜித் மீது துபாய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரும் கேரளாவுக்கு திரும்பி விட்டார். அதன்பிறகு கேரளாவில் வைத்து ராகுல்கிருஷ்ணாவுக்கு மீண்டும் ரூ.10 கோடிக்கு செக் கொடுத்துள்ளார். அதுவும் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதை தொடர்ந்து கேரள மாநிலம் செங்கனூர் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசடிகள் பற்றிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் கேரள அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.