செய்திகள்

மாட்டிறைச்சி வன்முறை, பெண்கள் இட ஒதுக்கீடு: பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்

பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் மாட்டிறைச்சி தொடர்பான வன்முறை பற்றி விவாதிக்க மா. கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருப்பதாக சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

டெல்லி:

இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா. கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயளாலர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:

இந்த ஆண்டு, நடைபெற உள்ள கூட்டத்தொடரானது பாராளுமன்ற வரலாற்றில் நடைபெறும் குறுகிய கால கூட்டத்தொடர். ஏற்கனவே பல மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

நாட்டில் தினமும் மாட்டிறைச்சி பெயரால் பல இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் பலர் கொல்லப்படுவது கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு கட்டாயம் அரசு பதிலளிக்க வேண்டும். 

மேலும், பாராளுமன்ற தேர்தலின் போது, பா.ஜ.க உறுதியளித்த உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இவ்விரு பிரச்சனைகள் குறித்து கேள்விகளை எழுப்ப உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.