செய்திகள்

புதுவை மாநிலம் மாகியில் பதட்டம்: மார்க்சிஸ்டு-பா.ஜனதா பிரமுகர்கள் படுகொலை

புதுவை மாநிலம் மாகியில் மார்க்சிஸ்டு- பா.ஜனதா மோதல் எழுந்துள்ளது. இதில் மார்க்சிஸ்டு, பா.ஜனதா பிரமுகர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ளது.

கேரள மாநிலத்தின் அரசியல் மாகி பிராந்தியத்திலும், பிரதிபலிக்கும். இதனால் கேரள மாநில அரசியலில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மோதல் மாகியில் எதிரொலிக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக மாகி பிராந்தியத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும், பா.ஜனதாவினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருதரப்பினரும் அடுத்தடுத்த கொலைகளும் நடந்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் மாகியில் மார்க்சிஸ்டு- பா.ஜனதா மோதல் எழுந்துள்ளது. இதில் மார்க்சிஸ்டு, பா.ஜனதா பிரமுகர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாகி பிராந்தியம் பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பாபு கன்னிபொயில் (வயது 45), கட்டிட ஒப்பந்ததாரரான இவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் கவுன்சிலரும் ஆவார்.

நேற்று இரவு பாபு கன்னிபொயில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே பாபு கன்னிபொயில் துடிதுடித்து இறந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றது. இது குறித்து பள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளூருக்கு அருகில் கேரள மாநிலத்தின் நியூமாகி பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சமீஜ் (வயது 35).

ஆட்டோ டிரைவரான சமீஜ் ஆர்.ஆர்.எஸ். மற்றும் பா.ஜனதா பிரமுகர். இவர் நேற்று இரவு படுகாயங்களுடன் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்தடுத்து ஒரு மணி நேரத்தில் 2 கொலைகள் நடந்திருப்பது மாகியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மார்க்சிஸ்டு பிரமுகர் கொலைக்கு பழிவாங்கப்படும் வகையில் பா.ஜனதா பிரமுகர் சமீஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. போலீ ரின் முதற்கட்ட விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாபு கன்னிபொயில் படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்திலும், கேரள மாநிலம் கண்ணூரிலும் இன்று கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் மாகி பிராந்தியத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. கண்ணூர் பல்கலைக்கழகம் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே மாகி பிராந்தியத்தில் பதட்டத்தை தணிக்க புதுவையில் இருந்து போலீசார் மாகிக்கு சென்றுள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி தலைமையில் 50 ஐ.ஆர்.பி.என். போலீசார் இன்று காலை மாகி சென்றடைந்தனர். அங்கு அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். #Tamilnews