மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் சுமார் ரூ.11,700 கோடி அளவுக்கு மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த வைர வியாபாரியும், கோடீசுவரருமான நிரவ் மோடி (வயது 46), அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்ஷி உள்ளிட்டவர்கள் மீது வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தது.
இதில் கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக கடந்த மாதம் 31-ந்தேதி சி.பி.ஐ. முதலில் வழக்கு பதிவு செய்திருந்தது. ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் அதாவது கடந்த 13-ந்தேதியே மேலும் ரூ.11,400 கோடி அளவு மோசடி நடந்திருப்பதாக நிரவ் மோடி மீது வங்கி நிர்வாகம் 2 புகார்களை அளித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் இந்த மோசடி தொடர்பாக வழக்கு பதியப்படும் முன்பே நிரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். நிரவ் மோடியும், நிஷாலும் கடந்த மாதம் 1-ந்தேதி வெளிநாடு தப்பிய நிலையில், அமியும், மெகுல் சோக்ஷியும் கடந்த மாதம் 6-ந்தேதி தப்பி ஓடி உள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், இதற்காக சர்வதேச போலீசின் (இன்டர்போல்) உதவியை நாடியுள்ளனர். இதற்காக உறுப்பு நாட்டை சேர்ந்த குற்றவாளி ஒருவரை கண்டுபிடிக்க பிறப்பிக்கப்படும் பரவல் அறிவிப்பை (டிபியூஷன் நோட்டீஸ்) வெளியிடுமாறு சர்வதேச போலீசை கேட்டுக்கொண்டுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் மறைவிடத்தை ஓரிரு நாட்களுக்குள் கண்டுபிடிக்க முடியும் என சி.பி.ஐ. நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.
இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரே புகாராக அளிக்காமல், தவணை முறையில் புகார் செய்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. பதிவு செய்த ரூ.280 கோடி மோசடி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு ஒரு வாரத்துக்குள் நேரில் ஆஜராகுமாறு நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷி ஆகியோருக்கு நேற்று சம்மன் அளிக்கப்பட்டது. இந்த சம்மனை இருவரின் நிறுவனங்களின் இயக்குனர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
முன்னதாக இந்த வழக்கில் மோடி மற்றும் சோக்ஷிக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.5100 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மெகுல் சோக்ஷி மீது நேற்று மேலும் ஒரு வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர். இது கடந்த 13-ந்தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்டதாகவும், இது ரூ.4,886 கோடி இழப்பு தொடர்பானது என்றும் சி.பி.ஐ. நிர்வாகம் கூறியுள்ளது.