செய்திகள்

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை 4 வாரம் நீடிப்பு

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை 4 வாரத்திற்கு நீட்டித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், "இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை சந்தையில் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது.

இந்த உத்தரவு 1960-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிராணிகள் வதைத்தடுப்பு சட்டத்திற்கு எதிரானது. மத வழிபாட்டிற்கு பிராணிகளைக் கொல்ல அனுமதி அளிக்கும் சட்டப் பிரிவு 28-க்கு எதிரானது.

மேலும், அரசியலமைப்புப் சட்ட பிரிவு 25 வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானது. இந்தியாவில் பெரும்பாலான சமூகங்கள் உணவுக்காக பிராணிகளை வதை செய்து, சுத்தம் செய்து உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையை பிற சட்டங்களால் தடுக்க இயலாது. மேலும், மாடுகளை இறைச்சிக்காக வளர்ப்பது மற்றும் விற்கும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.


இவர்களும் இந்த தடையால் பாதிக்கப்படுவர். எந்த உணவை உண்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. இந்த உரிமையும் தற்போது பிறப்பிக்கப்பட்ட தடையால் மீறப்படுகிறது. மக்களின் உணவுப்பழக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த தடை அமைந்துள்ளது.

எனவே இந்த தடையை சட்ட விரோதமானது எனவும், அரசியலமைப்பிற்கு எதிரானது என அறிவித்து உத்தரவிடவும், அதுவரை தடையை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல் மதுரை கலிமங்கலத்தை சேர்ந்த ஆசிக் இலாகி பாவா என்ற வக்கீலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.