தானே:
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்ச நிலையில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 23401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 868 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தானே நகரின் லோக்மான்யா சாவர்க்கர் நகர் பகுதியில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பணிகளும் முடக்கப்பட்டன. பொதுமக்கள் அனாவசியமாக வெளியே வருவது தடை செய்யப்பட்டது. பால் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.
அப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாததும் கண்டுபிடிக்கப்பட்டதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தானே நகரில் மொத்தம் 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 178 பேர் லோக்மான்யா சாவர்க்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.