செய்திகள்

2014-17 ஆண்டுகளில் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்குகளில் போதிய ஆதாரமின்றி 3268 பேர் விடுதலை

2014-17 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்குகளில், நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படாததால் 3268 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி :

இந்திய அரசியலையும் நாட்டையும் உலுக்கிய பல ஊழல் வழக்குகளில் 2ஜி வழக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் உரிமங்கள் வழங்காமல், முதலில் வந்தோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மந்திரியாக இருந்த ராசா உரிமங்கள் வழங்கியதால், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

குற்றச்சாட்டுகளில் வலுவான ஆதாரங்கள் இல்லை, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீது கூட சி.பி.ஐ.யால் குற்றத்தை உறுதிபடுத்த இயலவில்லை. குற்றச்சாட்டுகளை சரியான முறையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறி விட்டன என கூறி இந்த வழக்கில் இருந்து அனைவரையும் நீதிபதி விடுவித்தார்.

இதை போன்று பல மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் சி.பி.ஐ. சார்பில் தொடரப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய பிரமூகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்குகளிலும் போதிய  ஆதாரங்களை சமர்பிக்க சி.பி.ஐ. தவறியதால் கடந்த நான்கு ஆண்டுகளில் 3268 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2017 நவம்பர் வரையில் 184 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 755 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  2016-ம் ஆண்டு 944 பேரும், 2015-ம் ஆண்டு 821 பேரும், 2014-ம் ஆண்டு 748 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணைமந்திரி ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலினை தாக்கல் செய்துள்ளார்.

மற்றொரு கேளிவிக்கு பதிலளித்த அவர் சி.பி.ஐ.யினால் தொடரப்பட்ட 1800 வழக்குகளில் இதுவரை 3617 பேர் தண்டனை பெற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு 503 வழக்குகளில் 1005 பேரும், 2015-ம் ஆண்டு 434 வழக்குகளில் 878 பேரும், 2014-ம் ஆண்டு 509 வழக்குகளில் 993 பேரும் தண்டனை பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.