சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் தொடர்பாகவும், சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் தொடர்பாகவும் தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக கூறி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார், திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.
இதையொட்டி அவர் தலைமறைவாக இருந்தார் என்று வெளியான தகவல் தவறு.
இந்தநிலையில் ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த அவரை தமிழக போலீசார் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய அவரை நேற்று சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மனு அளித்தனர்.
திருமுருகன் காந்தி தரப்பில் ஆஜரான வக்கீல் ஐ.பெரியசாமி, “திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்தே அவர் பேசி உள்ளார். அவரது பேச்சில் தேசத்துரோகம் எதுவும் இல்லை. எனவே, அவரை சிறைக்கு அனுப்பக்கூடாது” என்று வாதாடினார்.
இதன்பின்னர், திருமுருகன்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக கைது செய்த நேரத்தில் இருந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தலாம் என்று சட்ட நடைமுறை இருப்பதால் திருமுருகன்காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருமுருகன்காந்தியிடம் 24 மணி நேரம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதன்பின்பு, தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் திருமுருகன்காந்தி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.