கோப்பு படம் 
செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல் - இன்ஸ்பெக்டர், எஸ்.ஜ., மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் வாகன சோதனையின் போது வாலிபர் மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ் ஐ மீது வழக்குபதிவு செய்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலையான் குளம் கிராமம் ஜெருசேலம் தர்மம் நகரை சேர்ந்தவர் அமராவதி மகன் தங்கதுரை (வயது 27). இவரும், இவரது நண்பருமான சங்கரன்கோவில் லட்சுமியா புரம் 3-வது தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி புளியங்குடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன், காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் பைக்கை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது தங்கதுரை தன்னிடம் உள்ள ஆர்.சி.புக் மழையில் நனைந்து விட்டதால் செல்போனில் உள்ள சாப்ட் காப்பி எனப்படும் ஆன்லைன் காப்பியை எடுத்து தருவதாக கூறி செல்போனை எடுத்துள்ளார்.

அப்போது அவரை போலீசார் தாக்கியதாகவும், மேலும் தங்கதுரை மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கதுரையை போலீசார் சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் போலீசாரை தாக்கியதாக தங்கத்துரை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தன்னை தாக்கியதால் தான் படுகாயமடைந்துள்ளதாக கூறி தங்கத்துரை சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையின் போதே தங்கத்துரை தன் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்றார். பின்னர் போலீசார் தன்னை தாக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். மேலும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயலெட்சுமி புகாரின் மீது தகுந்த முகாந்திரம் இருப்பின் சங்கரன்கோவில் டவுண் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT