செய்திகள்

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களின் நிலுவைத்தொகை ஒதுக்கீடு: நாளைக்குள் அரசாணை பிறக்க ஐகோர்ட்டு உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவை தொகை ரூ.175 கோடியை வழங்க அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்ப மறுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்தநிலையில், மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர் மாயாண்டிசேர்வை (வயது 82) என்பவர் ஐகோர்ட்டு நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் கிடைக் காமல் பசி, பட்டினியுடன் தவிப்பதாக கூறி இருந்தார்.

இந்தக்கடிதத்தை மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து(சூமோட்டோ) பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ஒய்வூதியர்களின் நலன் கருதி 379 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாகவும் அதில் 175 கோடி ரூபாயை 26-ந்தேதிக்குள் (இன்று) வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், 175 கோடி ரூபாயை வழங்குவது தொடர்பாக 26-ந் தேதிக்குள் (அதாவது இன்றைய தினத்துக்குள்) உரிய அரசாணையை பிறப்பித்து நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.