புதுடெல்லி:
டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்தது. உபேந்திரா ராயிடம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் உபேந்திராவின் பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, 3 நாள் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் உபேந்திரா ராய் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை இன்னும் முடிவடையாததால் சிபிஐ காவலை மேலும் 2 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். #journalistUpendraRai #Delhicourt #CBIcustody