தற்கொலை முயற்சி 
செய்திகள்

நொய்யல் ஆற்றில் மகன்கள் அடித்து செல்லப்பட்டதால் வேதனை - தற்கொலைக்கு முயன்ற தம்பதி

நொய்யல் ஆற்றில் தங்களது மகன்கள் 2 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மனவேதனை அடைந்த தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

கோவை பேரூர் அருகே உள்ள போளூவாம்பட்டி விராலியூரில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கடந்த 4-ந் தேதி மாலை இந்த சிலையை பொதுமக்கள் போளூவாம்பட்டி அருகே உள்ள நொய்யல் ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஆற்றின் அருகே சிலை சென்றதும் இளைஞர்கள் சிலர் நொய்யல் ஆற்றில் இறங்கி சிலையை கரைத்து கொண்டு இருந்தனர்.

அப்போது விராலியூரை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் ராமு (வயது 19) என்பவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார்.இதனை பார்த்த அவரது அண்ணன் மணிகண்டன் (22) என்பவர் ஆற்றில் குதித்து தனது தம்பியை காப்பாற்ற முயன்றார். அவரையும் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது.

இந்த தகவல் கிடைத்ததும் ஆலாந்துறை போலீசார் மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராமு, மணிகண்டன் ஆகியோரை கடந்த 4 நாட்களாக தேடி வருகின்றனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராமு மற்றும் மணிகண்டனை கண்டுபிடித்து தரும்படி அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை- சிறுவாணி ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைவில் கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் அவர்கள் இங்கு இருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து இன்று 4-வது நாளாக ஆலாந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 21 பேர் மூன்று பிரிவுகளாக பிரிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணன், தம்பியை தேடி வருகிறார்கள்.

தங்களது மகன்கள் 2 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மனவேதனை அடைந்த இவர்களின் தந்தை ஆனந்தன், தாய் சுமதி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வி‌ஷத்தை பிடுங்கி தூக்கி எறிந்தனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்ததை ஏற்படுத்தி உள்ளது.