திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு கிழக்கு வெள்ளையன் சேர்வை குடியிருப்பைச் சேர்ந்தவர் அருள் பட்டதாரியான இவர், செருவாவிடுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கறம்பக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜலெட்சுமி. இவரும் பட்டதாரி. ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்களது திருமணம் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
சித்துக்காட்டில் உள்ள மணமகன் வீட்டில் திருமண வரவேற்பும் நடைபெற்றது. முன்னதாக, திருமணம் முடிந்தவுடன் சித்துக்காடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கருப்பர் கோவில் வளாகத்திற்கு சென்ற மணமக்கள், அங்கு மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து தங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மணமக்கள் கபசுர குடிநீர் கொடுத்து வரவேற்றதுடன், பலவகையான மரக்கன்றுகளையும் வழங்கினர்.
நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் கபசுர குடிநீரை, திருமண விழாவில் வழங்கி வரவேற்ற மணமக்களை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.