டி.என்.பாளையம்:
கடம்பூர் அருகே உள்ள திங்களூர் ஊராட்சிக்குட்பட்டது நீர்குண்டிபுதூர். இந்த ஊரை ஒட்டிய பகுதியில் உள்ள மரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.
எனவே அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. இதுபற்றி கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தூக்கில் பிணமாக தொங்கிய ஆணும் பெண்ணும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது தெரியாமல் இருந்தது.
பிணங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் யார்? என்பது தொடர்பாக அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.
அப்போது தூக்கில் பிணமாக தொங்கிய 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த மாதேசாமி (25), சுமித்ரா (20) என்பதும், அவர்கள் காதல் ஜோடி என்பதும் தெரியவந்தது.
மாதேசாமியும், சுமித்ராவும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.
அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே காதலர்கள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில்தான் அவர்கள் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர். பெற்றோர் தங்கள் காதலை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடக்கிறது.