செய்திகள்

கவுண்ட்டவுன் தொடங்கியது: ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்கியது. நாளை மாலை ராக்கெட் ஏவப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.பி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இது இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டது. அதாவது 640 டன் எடையுள்ளது. இந்த ராக்கெட் நாளை (5-ந்தேதி) மாலை 5.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த ராக்கெட் மூலம் 3 ஆயிரத்து 136 கிலோ எடை கொண்ட ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 3.58 மணிக்கு தொடங்கியது.

கவுண்ட்டவுன் முடிந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் நாளை (5-ந்தேதி) மாலை 5.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய மைல் கல்லாக கருதப்படும், இந்த ராக்கெட் மூலம் எதிர்காலத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப முடியும். இந்த கனரக ராக்கெட் மூலம் பெண் ஒருவரை முதலில் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.