இம்பால்:
கொரோனா வைரஸ் பற்றி அனைவரும் அறிந்ததே. சீனாவில் இருந்து பரவிய இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றுநோய் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 636 பேர் பலியாகியுள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.
சீன மக்களின் உணவு முறைகளே கொரோனோ வைரஸ் பரவுவதற்கு காரணம் என கூறபட்டது. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் கொரோனோ வைரஸ் தொற்றுநோய் அறிகுறிகள் இருப்பதாக கருதப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக சீனா, மியான்மர் போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொட்டல உணவுகளுக்கு (பாக்கெட் உணவுகள்) மணிப்பூர் மாநில அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து மணிப்பூர் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் உணவு பாதுகாப்பு ஆணையர் கே.ராஜோ சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சீனா, மியான்மர் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு உணவுப் பொருட்களையும் எந்தவொரு நபரும் இறக்குமதி செய்யக்கூடாது. அவை உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (இறக்குமதி ) விதிமுறைகளுக்கு (2017) உட்பட்டிருக்கவில்லை.
விதிமுறைகளுக்கு உட்படாத எந்தவொரு பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை, எந்தவொரு நபரும் விற்பனை செய்வதற்காக எந்தவொரு முகவர் அல்லது தரகருக்கும் விநியோகிக்கவோ, அனுப்பவோ அல்லது வழங்கவோ கூடாது’, என தெரிவிக்கப்பட்டுள்ளது.