புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
அப்போது சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நேற்று காலை டெல்லி வந்த 35 வயதான வாலிபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு தலைவலியும் கடுமையாக இருந்துள்ளது. உடனே அவருக்கு தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவரை இரவு 9 மணி அளவில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென ஆஸ்பத்திரியின் 7வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இதுவரை 10 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.