கொரோனா வைரஸ் 
செய்திகள்

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற தாய்லாந்து வாலிபர் உயிரிழப்பு

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற தாய்லாந்து வாலிபர் திடீரென உயிரிழந்தார்.

மாலை மலர்

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு தமிழக பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். சென்னையில் சுற்றிப்பார்த்த அவர்கள் கடந்த 14-ந்தேதி கார் மூலம் ஈரோடு வந்தனர்.

ஈரோட்டில் இருந்தபோது 7 பேரில் ஒருவரான டான் ரோசாக் (வயது 40) என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தாய்லாந்துக்கு அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி 15-ந்தேதி கோவை விமான நிலையம் வந்தனர். கோவையில் இருந்து சென்னைக்கு சென்று பின்னர் அங்கிருந்து தாய்லாந்து செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

சுகாதாரத்துறையினர் வாலிபர் டான் ரோசாக்கை சோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விமானத்தில் அனுப்ப மறுத்து விட்டனர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் வாலிபர் டான் ரோசாக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த டான் ரோசாக் இன்று காலை திடீரென இறந்துவிட்டார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தூதரகம் மூலம் அவரது சொந்த நாட்டிற்கு உடல் அனுப்பப்படுகிறது.