மதுரை:
வெளிநாட்டில் இருந்து மதுரைக்கு வரும் பயணிகளால் கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துபாயில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவனியாபுரம் சின்னஉடைப்பு மற்றும் திருப்பரங்குன்றம் ஆஸ்டின்பட்டி தனியார் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு தனிமை மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு இல்லை என்பதை தொடர்ந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு உள்ளது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தோப்பூர் நெஞ்சக மருத்துவமனையில் நிரந்தர கொரோனா மையங்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறியதாவது:-
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 8 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு உள்ளது.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் 17 படுக்கைகளுடன் கூடிய நிரந்தர கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் முடிந்தால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டுகள் அமையும்.
தோப்பூர் நெஞ்சக மருத்துவமனையில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் 20 படுக்கைகளுடன் கூடிய நிரந்தர கொரோனா மையம் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
எனவே மதுரை, தோப்பூரில் நிரந்தர கொரோனா மையங்கள் கூடிய விரைவில் தயாராகி விடும். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 120-ம் வார்டில் இயங்கி வரும் கொரோனா சிறப்பு வார்டில் இதுவரை எவரும் அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.