மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி தயார் நிலையில் உள்ளது. இங்கு சுமார் 300 படுக்கைகள் உள்ளன. அதனை தொடர்ந்து திருமங்கலத்தில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் சுமார் 500 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையங்கள் தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த மையங்களில் சிகிச்சை அளிக்கப்படும். இந்தநிலையில் கூடுதலாக 500 படுக்கைகள் காமராஜர் பல்கலைக் கழக கொரோனா சிகிச்சை மையத்திற்கு நேற்று வந்தன.
மேலும் மதுரையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் பாதித்தவர்களின் குடும்பத்தினர்கள் மூலம் கொரோனா தொற்று பரவக்கூடும். ஆகவே அவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப கபசுர குடிநீர் மற்றும் சத்தான உணவு வழங்க புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பரங்குன்றத்தில் உள்ள 3 தனியார் கல்லூரி விடுதியில் 50 முதல் 100 படுக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல மதுரையை சுற்றி உள்ள 15-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி விடுதிகள் தற்காலிக மருத்துவமனையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.