பொள்ளாச்சி:
வால்பாறை அய்யர்பாடி எஸ்டேட்டை சேர்ந்த 26 வயது நர்சு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தங்கி சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நர்சுகாஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி சீட்டு பெற்று நேற்று வால்பாறைக்கு காரில் வந்தார். அவருடன் கணவர், தாய், பாட்டி ஆகியோரும் வந்தனர். வால்பாறைக்கு வருவதற்கு முன்பு நர்சுக்கு ரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துள்ளனர். ஆனால் பரிசோதனை முடிவு தெரிவதற்கு முன்பே வால்பாறைக்கு காரில் புறப்பட்டு வந்ததாக தெரிகிறது.இதற்கிடையில் வால்பாறை அருகே அட்டக்கட்டி வனத்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த மருத்துவ குழுவினர் நர்சு, அவரது கணவர், தாய், பாட்டி மற்றும் அவர் வந்த காரின் டிரைவர் ஆகிய 5 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர். அதில் அவரது பாட்டிக்கு கடுமையான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் எஸ்டேட் பகுதிக்குள் அனுமதிக்காமல் உடனடியாக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை டாக்டர் பாபுலட்சுமணன் ஆலோசனையின் பேரில் கொரோனா தனி வார்டில் அனுமதித்து கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் அவர்களை கண்காணித்து வருகிறார்கள். சிவப்பு மண்டல பகுதியான சென்னையில் இருந்து அவர்கள் வந்ததால் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பரிசோதனை முடிவுக்கு பின்னர் தான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று என்று டாக்டர்கள் கூறினர்.