திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மிஷன் மருத்துவமனை. தற்போது கண் மருத்துவம் மட்டும் பார்க்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின்பேரில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மருத்துவமனையில் எத்தனை படுக்கை வசதிகள் அமைக்க முடியும் மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், தாசில்தார் ஜெயலட்சுமி, சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட் ராஜ், டவுன் இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசின் உரிய வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும். அவ்வாறு வழிகாட்டுதலை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று துணை இயக்குனர் தெரிவித்தார்.