கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிசன் பகுதியை சேர்ந்தவர் கமலம் (58). இவர் எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வால்பாறை திரும்பினார்.
நேற்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட கமலத்தை உறவினர்கள் சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கமலத்தை பாதுகாப்பு கவச உடை அணிவித்து சிறப்பு ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.ஆர். தியேட்டர் சாலையை சேர்ந்தவர் கோபால். இவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி (22). கடந்த வாரம் இவர் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பொள்ளாச்சி திரும்பினார்.
இந்நிலையில் மகாலட்சுமிக்கு திடீர் காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டதால் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்பதால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கமலம், மகாலட்சுமி ஆகியோரின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து தெரியவரும்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் அறிகுறியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தைவான் நாட்டை சேர்ந்த வாலிபர் கத்தாரில் இருந்து வந்த இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.