மதுரை:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தொற்று பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. நேற்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு பன்றி காய்ச்சல் உள்ளதா? என்பது தொடர்பாக பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவில் அவருக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் முதியவருக்கு காய்ச்சல் குறையவில்லை.
எனவே அவருக்கு நிமோனியா காய்ச்சல் பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த முதியவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் முதியவரின் ரத்தம், சளி ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்தனர். பரிசோதனைக்காக தேனி கொரோனா ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதியவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 40 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வாலிபர் கடந்த சில நாட்களாக தொண்டை வலி, காய்ச்சலால் அவதிப்பட்டார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த வாலிபரின் சளி, ரத்தம் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவர் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரும்.