கொரோனா வைரஸ் 
செய்திகள்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் வந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனி மருத்துவ வார்டில் கொரோனா அறிகுறியுடன் வந்த 3 பேருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாலை மலர்

திருச்சி:

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக 3 ஆயிரத்து 500 பேர் வரை பலியாகி உள்ளனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர். சீனாவில் இருந்து பல நாடுகளுக்கும் கொரோனா பரவியுள்ளது.

இந்தியாவில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதையடுத்து, மேலும் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் அனைத்து பயணிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக பெங்களூர், சென்னை, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகளில் இருந்து திருச்சி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தனி மருத்துவ வார்டு அமைக்கப்பட்டு பயணிகள் அனைவரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். கடந்த மாதமே அங்கு மருத்துவ வார்டு அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மலேசியா, ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது காசிமின் ஒரு வயது குழந்தையான முகமது துலுக் மன் அல் ஹக்கீம் மற்றும் தூத்துக்குடி சுந்தரபாண்டி (25), ஷார்ஜாவில் இருந்து வந்த சேலம் ஆத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (27) ஆகிய 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து 3 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி மருத்துவ வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், 3 பேருக்கும் காய்ச்சல், சளி உள்ளது. அதனை கட்டுப்படுத்த சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் சளி, ரத்தம் மாதிரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் முடிவில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பது தெரிய வரும் என்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன் திருச்சி கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.

அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தாக்கத்தை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய குழு பணியமர்த்தப்பட்டுள்ளது அதிக காய்ச்சல் (104 டிகிரிக்கு மேல்), தலைவலி, மூச்சுவிட சிரமப்படுதல் மற்றும் உடல்வலி, தும்மல், இருமல் உள்ளிட்ட கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்நோய் தடுப்புக்காக, அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. மக்கள் ஒரு நாளைக்கு 5 முறை கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தவேண்டும்.

மருத்துவமனைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனை மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் தடுப்பு முறைகள் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும். பொது சுகாதாரத்துறை தகுந்த முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதே சமயம் தன் சுத்தத்தை பேண வேண்டும் என்றார்.