கொரோனா வைரஸ் வடிவ சிறுநீரகக்கல் 
செய்திகள்

வாழப்பாடி முதியவர் உடலில் கொரோனா வைரஸ் வடிவ சிறுநீரகக்கல்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதியவர் உடலில் இருந்து அகற்றப்பட்ட கொரோனா வைரஸ் வடிவ சிறுநீரகக்கல்லின் படம், தற்போது முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாலை மலர்

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் அருகே மின்னாம்பள்ளியில் இயங்கும் தனியார் மருத்துவமனையில், தீராத வயிற்று வலியால் அவதிக்குள்ளான, ஆத்தூர் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவருக்கு அண்மையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் இவருக்கு சிறுநீரகப்பை மற்றும் சிறுநீரகக் குழாய்களில் கற்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மருத்துவர் பிரவீன்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், இந்த முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்த அறுவை சிகிச்சையில், இவரது சிறுநீரகப்பையில் இருந்த 3 செ.மீ. அளவு கொண்ட சிறுநீரகக்கல் அகற்றப்பட்டது. முதியவரின் சிறுநீரகப்பையில் இருந்து அகற்றப்பட்ட இந்த சிறுநீரகக்கல், உலகம் முழுவதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும், கொரோனா வைரஸ் வடிவத்தில் காணப்பட்டது.

தனியார் மருத்துவமனை வெளியிட்ட கொரோனா வைரஸ் வடிவ சிறுநீரகக்கல்லின் படம், தற்போது முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.