திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முகக்கவசம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் கடைகளில் ரூ.20 வரை விலை வைத்து விற்கப்படுகிறது.
ஏழை மக்கள் வசதிக்காக அரசியல் கட்சியினர் சமூக சேவகர்கள், இலவசமாக பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி வருகிறார்கள். இருப்பினும் கடைக்கோடி கிராமங்களுக்கு முகக்கவசங்கள் தேவை அதிகரித்துள்ளது.
கிராமங்களில் முகக்கவசங்கள் கிடைக்காததால் பெண்கள், ஆண்கள் அனைவரும் சேலை, துண்டு, துப்பட்டா, கைக்குட்டை போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தற்போது கிராம மக்களை சென்று சந்தித்து அவர்கள் வழங்கி வருகிறார்கள். இதை போட்டி போட்டு மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். கிராமங்களில் முகவர்கள் தேவை அதிகரித்துள்ளதால் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிராமங்களை குறி வைத்து செயல்படும்படி கோரிக்கை எழுந்துள்ளது,
திருச்சி மாவட்ட ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில், செயலாளர் யசோதன், மாநில மகளிர் அணி நிர்வாகி லீமா சிவக்குமார் மற்றும் அழகர்சாமி ஆகியோர் திருச்சி அருகே உள்ள மேக்குடி கிராமத்தில் கிராம மக்களுக்கு இலவசமாக கவசங்களை வழங்கினர். இதை ஆர்வமுடன் வாங்கிய மக்கள் அதை பயன்படுத்துவது குறித்தும் கேட்டறிந்து பயன்படுத்தி வருகின்றனர். இலவசமாக உணவு வழங்கப்படுவதைவிட இலவசமாக முகக்கவசங்களை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். பஞ்சாயத்துகள் மூலம் இந்த கவசங்கள் வழங்கப்பட்டு வந்தாலும் இதன் தேவை அதிகரித்துள்ளது. எனவே உற்பத்தியையும் பெருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.