கோயம்பத்தூர் மாவட்டம் 
செய்திகள்

ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது கோவை- கலெக்டர் தகவல்

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு கோவை மாவட்டம் மாறியதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தநிலையில் 132 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். நேற்று மேலும் 2 பேர் குணமடைந்தனர். மீதம் கோவையில் இன்னும் 7 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் கோவையில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளது. கே.கே.புதூர் பகுதியில் விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கொரோனா தாக்கத்தில் இருந்து படிப்படியாக குறைந்து சிவப்பு நிற மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு நிற பகுதிக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் பச்சை நிற மண்டலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் கோவையில் சிகிச்சை பெறும் 7 பேரும் வீடு திரும்புவார்கள்.

கோவை மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களில் இருந்தோ அல்லது மாநிலங்களில் இருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதுவரை கொரோனா தொற்று சந்தேகத்தில் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து முடுக்கிவிடப்படும்.

3-ந்தேதிக்கு (நாளை) பின்னர் ஊரக பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தொழிற்சாலைகளை திறக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.