கொரோனா வைரஸ் 
செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிக்காத குஜிலியம்பாறை

திண்டுக்கல் மாவட்டத்திலேயே இதுவரை குஜிலியம்பாறை தாலுகாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 108 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 80 பேர் குணமாகி வீடு திரும்பினர். 27 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று வரை 108 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 96 வயதுடைய முதியவர் உயிரிழந்தார். திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 39 பேர், மேற்கு வட்டத்தில் 9 பேர், ஒட்டன்சத்திரத்தில் 11, பழனியில் 9, வேடசந்தூரில் 2, நத்தத்தில் 11 என 6 தாலுகாக்களைச் சேர்ந்த 80 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினர்.

திண்டுக்கல் கிழக்கு தாலுகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38 பேரில் 2 பேர் வங்கதேசத்தையும் 2 பேர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது 27 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்தூர் தாலுகாவில் 3, கொடைக்கானலில் ஒருவர், நிலக்கோட்டையில் 21 பேர் என மொத்தம் 27 பேர் சிகிச்சையில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலேயே இதுவரை குஜிலியம்பாறை தாலுகாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்த பட்டியலில் கொடைக்கானலும் இருந்து வந்த நிலையில் கூக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் இருந்து திரும்பியதால் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 31 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு தளர்வு கடைப்பிடிக்கப்படவில்லை. கொரோனா தொற்று கண்டறியப்பட்டு குணமடைந்த நபர்களின் பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டத்தில் 17 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை மவுன்ஸ்புரம், லட்சுமி சுந்தரம் காலனி, வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள எம்.ஆர்.ஆர். நகர், பூச்சிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

மக்கான் தெரு, காந்திஜி புதுரோடு, பெரியார் நகர், நரிப்பாறை, முகமதியாபுரம், சிவபெருமாள் நகர், கோவிந்தசாமி நகர், மதினா காம்பவுண்டு, நத்தர்ஷா தெரு, புலவர் தெரு, ஜமால் தெரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.