ஒரு நாடு தனது எதிரி நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்துவது ஒரு போர் முறையாக உள்ளது.
இது மட்டுமல்லாமல் மறைமுகமாக சில தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. அதாவது பொருளாதார ரீதியாக எதிரி நாட்டை நசுக்குவது, நோயை ஏற்படுத்தி நாட்டை பலவீனமடைய செய்வது போன்றவையும் நடக்கிறது.
இதற்காக புதிய, புதிய நோய் கிருமிகளை பல நாடுகள் உருவாக்குகின்றன. இதற்கு ‘பயோ வெப்பன்’ (உயிரி ஆயுதம்) என்று பெயர்.
இந்த வகையில் தான் ஏதோ ஒரு நாடு உருவாக்கிய கொரோனா வைரஸ் வெளியே பரவி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கொரோனா வைரஸ் மனிதனால் ஆய்வு கூடத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.
தனியார் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை அவர் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது:-
கொரோனா வைரசோடு நாம் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இது, இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. மனிதனால் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ். இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு உலகம் முழுவதும் பல நாடுகள் போராடிக் கொண்டு இருக்கின்றன.
இந்த நோயை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. இதற்கு இன்னும் சிறந்த முறை தேவைப்படுகிறது. இப்படி ஒரு வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்து வரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
கொரோனாவை எதிர்கொள்ள உலகம் தயாராகி வருகிறது. இந்தியாவும் தயாராகிறது. இதற்கு விஞ்ஞானிகள் நல்ல தீர்வு காண்பார்கள். நம்பிக்கையோடு இருப்போம். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது. இது விரைவிலேயே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அது மட்டுமல்லாமல் மாற்று தீர்வு மூலமும் இந்த பிரச்சினையை நாம் எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.