திருச்சி:
திருச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களில் பயணிகள் அமரும் இருக்கைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகள், மால்கள் ஆகியவற்றை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களையும் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோவிலில் நாளை முதல் பக்தர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி கோவிலில் பக்தர்கள் நுழையும் கிழக்கு, வடக்கு, தெற்கு கோபுர வாசல்களில் காய்ச்சலை கண்டறியும் அதிநவீன தெர்மோ மீட்டர்களை பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். சளி, இருமல், காய்ச்சல் கொரோனாவுக்கான அறிகுறிகள் என்பதால் அவைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்படும்.