மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த “டைமண்ட் பிரின்சஸ்”என்ற சொகுசு கப்பலில் அன்பழகன் பணி புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு நாடாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் இந்த கப்பலில் 3 ஆயிரத்து 500 பயணிகளில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி ஜப்பானில் உள்ள யகோகாமா துறைமுகத்தில் கடலிலேயே அந்த கப்பல் நிறுத்தப்பட்டது.
மருத்துவக்குழுவினர் கப்பலுக்குள் சென்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அன்பழகன் கப்பலில் இருந்தபடியே தனது மனைவி மற்றும் குடும்பத்தினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு வீடியோ அனுப்பியுள்ளார்.
சுற்றுலா கப்பலில் நான் உள்பட 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாளர்களாக உள்ளோம். இதில் 6 பேர் தமிழர்கள்.
தாய்லாந்து நாட்டிற்கு கப்பல் சென்றபோது அங்கிருந்து பயணித்த ஒரு முதியவர் மூலம் கொரோனா வைரஸ் மற்ற கப்பல் பயணிகளுக்கும் பரவியது.
இதுவரை கப்பலில் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பரவி விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 8 நாட்களாக மிகுந்த கஷ்டத்துடன் ஒவ்வொரு நிமிடங்களையும் கழித்து வருகிறோம்.
எனவே கப்பலில் சிக்கியுள்ள எங்களை மத்திய-மாநில அரசுகள் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து கண்கலங்கிய அவரது மனைவி மல்லிகா மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஜப்பான் துறைமுகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் கடந்த 8 நாட்களாக என் கணவர் பணியாற்றும் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் என் கணவர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து வருகிறார்கள்.
என் வாழ்க்கையின் ஆதாரமே என் கணவர் தான். அவரது வருமானத்தில் தான் காலம் கழித்து வருகிறோம்.
எனவே மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து என் கணவரை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.