சென்னை:
ஐகோர்ட்டில், சிவமுத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் கடந்த 1987ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது.
இந்த சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் இந்த மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட வாரியத்தின் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை பலர் சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 420 குடிநீர் ஆலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருட்டில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.’
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, முறையான அனுமதி மற்றும் உரிமம் இல்லாததால் மூடப்பட்ட சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் ரூ. 50 ஆயிரம் முன்வைப்புத் தொகையுடன் அரசின் விதிகளைப் பின்பற்றி உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் குடிநீர் நிறுவனங்களுக்கான உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களில் , மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதி செய்வது, அவர்கள் எவ்வளவு நீரை எடுத்துள்ளார்கள் என்பதற்கான அளவீட்டுக் கருவியைப் பொருத்துவது மற்றும் ஆலைகளுக்கு அனுமதி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கோரி 1,054 விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளது. அவற்றில் 690 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்க தகுதி உடையதாக உள்ளன.
ஐகோர்ட்டு உத்தரவின்படி நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதன் அடிப்படையில் உரிமம் வழங்க 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் உரிமம் கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட துறை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை வருகிற 30ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.