கோப்பு படம் 
செய்திகள்

கொரோனா பாதிப்பு - சென்னையில் 10 பேர் தீவிர கண்காணிப்பு

உபி வாலிபருடன் தொடர்பில் இருந்த சென்னையை சேர்ந்த 10 பேர் பூந்தமல்லியில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு முகாமில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு கடந்த சில வாரங்களாக தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய காஞ்சீபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயருக்கு கொரோனா தொற்று இருந்தது கடந்த மாதம் கண்டு பிடிக்கப்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் குணம் அடைந்து வீடு திரும்பினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் என்பதால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மூலமாக வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர்.

இதன் பிறகு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டது.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுடன் வணிக வளாகங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பஸ்-ரெயில் நிலையங்களில் கிருமி நாசினிகளும் தெளிக்கப்பட்டன.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து ரெயிலில் சென்னை வந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த 20 வயதான சவர தொழிலாளியான அந்த வாலிபர் டெல்லியில் சலூன் கடையில் பணிபுரிந்து வந்தார்.

அங்கு வேலை சரியாக அமையாததால் சென்னையில் உள்ள அவரது நண்பர்களின் ஆலோசனையின் பேரில் வேலை தேடி சென்னைக்கு கடந்த 10-ந்தேதி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்துள்ளார்.

2 நாட்கள் கழித்து கடந்த 12-ந்தேதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவர் சென்னையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி உள்ளார். அதே பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலைக்கும் சேர்ந்துள்ளார்.

டெல்லியில் இருந்து வரும்போதே லேசான காய்ச்சல் மற்றும் சளியுடன் அவர் வந்ததாக தெரிகிறது. அதற்கு சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்தது.

இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந்தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் புனேவுக்கு அனுப்பப்பட்டது. இதில் உ.பி. வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

தமிழக சுகாதாரத்துறையினர் இதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தொடங்கினர்.

கொரோனா பாதித்த உத்தரபிரதேச இளைஞரை காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி கூறும்போது, “பாதிக்கப்பட்ட நபர் குணம் அடைந்து வருகிறார். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்தார்.

கொரோனா பாதித்த உத்தரபிரதேச வாலிபர் சென்னையில் பணிபுரிந்த சலூன் கடையை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வாலிபருடன் 6 பேர் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. அருகில் 4 பேர் வசித்துள்ளனர்.

இவர்கள் 10 பேரும் நேற்று இரவு 10.30 மணி அளவில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை 10 பேரும் பூந்தமல்லியில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு முகாமில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

இவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி கொரோனா தொற்று உள்ளதா? என ஆய்வு செய்ய உள்ளனர். இதன் முடிவுகள் தெரிய வந்த பிறகே 10 பேரும் வெளியில் அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையிலும் கொரோனா பாதிப்பு பற்றி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில் வருமாறு:-

காஞ்சீபுரத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.

நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார். கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் தொடர்பில் இருந்த 10 பேரை கண்டுபிடித்து தனியாக வைத்து கண்காணித்து வருகிறோம்.

அரசு ஆஸ்பத்திரிகளில் 32 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தாக்குதல் இல்லை. பலர் தாமாக முன் வந்து ரத்த பரிசோதனை செய்துள்ளனர்.

ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை செய்யும் வசதியை தொடங்க இருக்கிறோம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தால் ரூ.5 ஆயிரம் கட்டணமாக கேட்பதாக கூறப்படுகிறது. கொரோனா சிகிச்சை பெற்றால் காப்பீட்டு வசதியை பயன்படுத்தி கட்டணமில்லாமல் சிகிச்சை பெற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

கொரோனா சிகிச்சை பெற எந்தவித கட்டணமும் இல்லை. அனைவருக்கும் அரசு இலவச சிகிச்சை தான் வழங்கி வருகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.5 ஆயிரம் கட்டணம் பெற வாய்ப்பில்லை. ஏனென்றால் பரிசோதனைக்கான அனுமதி இதுவரை கொடுக்கவில்லை.

கொரோனா ஆய்வு வசதி இந்தியாவிலேயே புனேவில் மட்டும் தான் முதலில் இருந்தது. இரண்டாவதாக சென்னை கிண்டி மருத்துவமனையில் ஆய்வகத்தை தொடங்கினோம். தமிழகத்தில் தற்போது 5 இடங்களில் இருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் 11 இடங்களில் தான் ஆய்வு வசதி இருக்கிறது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த ஆய்வு வசதிக்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற வேண்டும் என்று உறுப்பினர்கள் இங்கு பேசினார்கள்.

தகுந்த மருத்துவ வசதியுள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கலாம் என்று நாங்கள் மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறோம்.இதுவரை எந்த தனியார் ஆஸ்பத்திரிக்கும் அந்த அனுமதியை கொடுக்கவில்லை.

அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு யாரும் நெருங்க முடியாத அளவில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டால் மருத்துவ காப்பீடுகளை பயன்படுத்த வசதி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT