பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குள் உள்ள சுப்பையா பிள்ளை கோவில் தெருவில் வசித்து வந்த 55 வயது நபர் தனது மனைவியின் சிகிச்சைக்காக அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றார். அப்போது நாகர்கோவில் மாவட்ட எல்லையில் இவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தஞ்சை மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், முதியவர் வசித்து வந்த பட்டுகோட்டை சுப்பையா பிள்ளை கோவில் தெருவை சுற்றி பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டது. அவருடன் பழகிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
தொடர்ந்து அந்த பகுதிக்குள் யாரும் செல்லாமலும், அங்கிருந்து யாரும் வெளியில் வராமலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.