ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்ட காட்சி. 
செய்திகள்

ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் ‘கொரோனா’ வார்டில் வாலிபர் அனுமதி

ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் ஓமன் நாட்டில் இருந்து ஊருக்கு வந்த வாலிபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்தமாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மாலை மலர்

நாகர்கோவில்:

கொரோனா வைரஸ் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து குமரி மாவட்டம் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது அமெரிக்காவில் இருந்து ஊருக்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டில் தனியாக அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் இத்தாலியில் இருந்து திரும்பிய ஒருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனது கட்டுப்பாட்டில் வைத்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.

ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் ஏற்கனவே 3 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு பிறகு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று குளச்சல் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் ஓமன் நாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். அவர் பரிசோதனைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது ரத்தமாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இன்று மதியம் அதற்கான முடிவுகள் கிடைக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள வாலிபரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கொரோனா வார்டுக்கு வெளியே தினமும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறுகையில், குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. சுகாதாரத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க அடிக்கடி கை கழுவ வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்.

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு யாரும் வந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.